கடலோர காவல்படையில் 2 புதிய நவீன படகுகள்: இணைப்பு
சென்னை அருகே தயாரிக்கப்பட்ட 2 புதிய ரோந்து படகுகள் கடலோர காவல்படை கிழக்கு மண்டலத்தில் நேற்று இணைக்கப்பட்டது.
தமிழகத்தை தலைமையிடமாக கொண்ட, இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு மண்டலத்தின் படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவ்வப்போது புதிய கப்பல்கள் மற்றும் ரோந்து படகுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடியின் மேக் இந்தியா திட்டத்தின் கீழ், தற்போது போர் கப்பல்கள் மற்றும் படகுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை எண்ணூர் அருகே உள்ள எல்அன்டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 2 புதிய நவீன ரோந்து படகுகள் நேற்று கடலோர காவல்படை கிழக்கு மண்டலத்தில் இணைக்கப்பட்டது. சி-433, சி-434 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 2 புதிய படகுகள், 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயங்ரவாதிகள் ஊடுருவலை கண்காணித்தல், கடத்தலை தடுப்பது, மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்பட அனைத்து வகையான பணிகளுக்கும் இந்த படகுகள் ஈடுபடுத்தப்படும் என கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் கடலோர காவல்படையின் வலிமை மேலும் வலுப்பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 15 ஆண்டுகள் வரை இந்த படகுகள் சேவையில் இருக்கும். மணிக்கு 40 நாட்டிக்கல் மைல் தூரம் செல்லும். இந்த படகில் ஒரு அதிகாரி உள்பட 12 பேர் பணியில் இருப்பர்.