Skip to main content

போலீஸ் திருடினால் குற்றமில்லையா? சீறும் பிரபல வழக்கறிஞர் புகழேந்தி!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
lady-police


சென்னை எழும்பூரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் போலீஸ் நந்தினியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ள சென்னை மாநகர காவல்துறை. ஆனால், திருடிய குற்றத்துக்கு பெண் போலீஸ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கொந்தளித்துபோய் கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல வழக்கறிஞர் புகழேந்தி.

இதுகுறித்து, நக்கீரனுக்கு அளித்த பேட்டியில், “பெண் போலீஸ் திருடியதும்… அதனை கண்டித்த சூப்பர் மார்க்கெட் கடையின் உரிமையாளர்களை பெண் போலீஸின் கணவன் தாக்கியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை என்றால் காவல்துறை இதை ஒரு வழக்காகவே பதிவு செய்திருக்காது. வீடியோ ஆதாரத்துடன் சிக்கியதால்தான் பெண் போலீஸின் கணவன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை. ஆனால், பெண் போலீஸ் நந்தினி திருடிய குற்றத்துக்கு என்ன தண்டனை? இதுவே, நீங்களோ நானோ என சாதாரண மனிதர்கள் திருடியிருந்தால் காவல்துறை சும்மா விட்டுவிடுமா?

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை அரசாங்கம் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறது. காவல்துறை செய்கிற குற்றங்களையும் தவறுகளையும் சட்டரீதியாக தண்டித்தால் தங்களது துறைக்கே அது பாதகமாக அமைந்துவிடும் என்று காவல்துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள். அதனுடைய கட்டுப்பாடு குலைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தங்களுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் காவல்துறையில் உள்ளவர்கள் மறைக்கும் வேலையில்தான் ஈடுபடுகிறார்கள்.
 

advocate


சட்டத்தின் முன் அனைவரும் சமம். சாதாரண பொதுமக்களுக்கு என்ன சட்டமோ அதுதான் காவல்துறையினருக்கும் என்பதை காவல்துறையினர் தங்களது மனதளவில்கூட நினைப்பதில்லை. சட்டத்தையும் சட்ட ஒழுங்கையும் காப்பாற்ற வேண்டியவர்கள் நாங்கள். ஆனால், நாங்கள் சட்டத்தை மீறலாம். மக்கள்தான் மீறக்கூடாது என்பது காவல்துறையின் எண்ணம்.

தமிழ்நாடு முழுக்க நகை திருடன்களிடமிருந்து மீட்கப்படும் நகைகளை கொஞ்சமாக கணக்கு காட்டிவிட்டு மீதி நகைகளை இவர்களே பங்குபோட்டுக்கொள்கிறார்கள்; அதாவது திருடன்களிடமிருந்து போலீஸே திருடிக்கொள்கிறது. ஆனால், போலீஸ் திருடினால் திருட்டு அல்ல. அதாவது, அரசின் அங்கீகரிக்கப்பட்ட குற்றவாளிகள். பொதுமக்கள் செய்யக்கூடிய குற்றத்தை இவர்கள் செய்தால் குற்றமல்ல. நாம், குற்றம் செய்தால் காவல்துறை தட்டிக்கேட்கலாம். அவர்கள், குற்றம் செய்தால் பொதுமக்கள் நாம் தட்டிக்கேட்க முடியாது.

இப்போது, திருடிய பெண் போலீஸ் நந்தினி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற, துறை ரீதியான நடவடிக்கை என்பது வெறும் கண் துடைப்புதான். கடந்த, கடந்த ஜூன் மாதம்-20 ந்தேதி புழல் மத்தியில் சிறையில் ரவுடி பாஸ்கர் முரளி சக கைதிகளால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பணியில் கவனக்குறைவாக இருந்த உதவி ஜெயிலர் பழனிவேல், முதன்மை தலைமை காவலர் நாகராஜன் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட செய்திதான் பரபரப்பாக பத்திரிகைகளிலும் ஊடகங்களில் வெளியானது. ஆனால், சத்தமில்லாமல் பதினைந்தே நாளில் மீண்டும் அவர்கள் பணியில் சேர்ந்துவிட்டார்கள்.

இதேபோல், ஒரு மாதத்திலோ இரண்டு மாதத்திலோ நந்தினியும் பணியில் சேர்ந்துவிடுவார். பிறகெப்படி குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் போலீஸுக்கு வரும்? துறை ரீதியான நடவடிக்கை என்பதே 80 சதவீதம் ஏமாற்று வேலைதான். ஆக, பொதுமக்களும் போலீஸும் ஒன்றுதான். குற்றங்களை காவல்துறையினர் செய்தாலும் சட்டப்படி குற்றம்தான் என்று நடவடிக்கை எடுக்காதவரை மக்களுக்கு எதிரான காவல்துறையினரின் குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்” என்கிறார் அதிரடியாக.

இதுகுறித்து, பெண் போலீஸ் நந்தினியின் மீது நடவடிக்கை எடுக்காத எழும்பூர் இன்ஸ்பெக்டர் சேட்டுவிடம் நாம் கேட்டபோது, “சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் போலீஸ் நந்தினியின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நந்தினி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்றவரிடம், “திருடிய குற்றத்துக்கு நீங்கள் ஏன் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேட்டபோது, பதில் சொல்லாமல் சிரித்தபடி ஃபோனை துண்டித்தார் இன்ஸ்பெக்டர்.

குற்றம் செய்யும் காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்களா?

சார்ந்த செய்திகள்