கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திய நிலையில் இந்தியாவில் 21 நாள் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 10 நாட்கள் முடிந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு மாநிலத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் கரோனா பதிப்பு எதுவும் அதிகப்படியாக இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு டெல்லி கூட்டத்திற்குச் சென்று வந்தவர்கள் பட்டியல் எடுத்து அவர்களை அழைத்து வந்து சோதனைக்கு உட்படுத்தினார்கள்.அவர்களைச் சோதனைக்கு உட்படுத்தி 4 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் ரிசல்ட் மட்டும் வெளியிடப்படாமல் வைத்திருந்தனர்.
கரோனா பாதிப்பு பட்டியலில் திருச்சி வரவில்லை என்பதால் பொதுமக்கள் சாலையில் பயணிக்க ஆரம்பித்தனர்.இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் கரோனா சோதனையின்போது காலாவதியான மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு வந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.இதை நக்கீரன் இணையத்தில் வெளியிட்டோம்.
அப்போது இந்தக் குற்றச்சாட்டை சொன்ன அமைப்பைச் சேர்ந்த முக்கியமானவர்களை அழைத்து பேசிய திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர், அந்த உபகரணம் எந்தச் சோதனையையும் பாதிக்காது,இது பிரிண்டிங் மிஸ்டேக் என்று சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார்.
இதற்கு இடையில் சோதனைக்கு எடுக்கப்பட்ட மாதிரியை டெஸ்ட் பண்ணுவதற்கு திருவாரூர் அனுப்பி வைத்தனர்.அந்தச் சோதனை முடிவுகளை மீண்டும் மறு ஆய்வு செய்வதற்கு விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.அந்த ஆய்வின் முடிவுகள் வெளிவந்துவிட்டது. ஆனால் அதை இன்னும் முறைப்படி அறிக்கவில்லை.ஒரு வேலை இன்று 04.04.2020 மாலை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
அந்தப் பட்டியலில் முதல்கட்டமாக 29 பேர் கரோனா ஆய்வுக்குச் சோதனை செய்ததில் 18 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சி அதிகாரிகள் இதனால் உஷார் ஆகியுள்ளனர்.
இந்தப் பட்டியலை பார்த்த அதிகாரிகள் நோய்த் தொற்று பரவலைக் கட்டுபடுத்துவதற்கு என்று கிட்டதட்ட 12 இலட்ச ரூபாய்க்கு மாவட்ட நலப்பணிக்குழு உதவியுடன் புதிய கருவி ஒன்று வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.இதனை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
கரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் திருச்சி நம்பர் 1 டோல்கேட்,உறையூர், லால்குடி, முசிறி, தில்லைநகர், பீமநகர், பொன்னகர், அண்ணநகர், மணப்பாறை, ஆழ்வார்தோப்பு, மண்ணச்சநல்லூர், தென்னூர், பாலக்கரை, திருவெறும்பூர், துவாக்குடி ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 29 பேரில் 18 பேருக்குப் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. இன்னும் 60 பேர் ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
ஏற்கனவே லால்குடி, தாளக்குடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்து திருச்சி மாநகரில் பல்வேறு இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இருப்போம் என மக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் வைப்பதுடன்,மக்கள் வீட்டிற்குள் இருந்தால்தான் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவது சாத்தியம் என்கின்றனர்.