![car accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/1HQbK64QHKATbGZnQskYKiYgi67L8rNczgqiGBcH8Kg/1533641594/sites/default/files/inline-images/car%20accident_0.jpg)
சென்னை பட்டினப்பாக்கம் அருகே சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் எம்.ஆர்.சி நகர் பேருந்துநிலையம் அருகே சாந்தோமிலிருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று முன்னால் சென்ற இரண்டு மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு காருக்கடியில் சிக்கினர்.
அப்படியும் நிற்காத கார் முன்னால் சென்றுக்கொண்டிருந்த டாடா ஏஸ் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மோதிய வேகத்தில் டாடா ஏஸ் வேனுடன் சாலையின் ஓரம் சுவற்றில் மோதி நின்றது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தை கண்டு அருகிலிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கார் ஓட்டி வந்தவரை வெளியே இழுத்து அடித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த அபூபக்கர்(23), அமீர் ஜஹான்(25), அருண்பிரசாத்(26), இலையராஜா(39), மார்க்ஸ்(25), மற்றும் பெயர் தெரியாத இளைஞர் ஒருவர் என 6 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை போலீஸார் மீட்டு உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய நபர், சென்னை துறைப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரீகன் என்பதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அபுதாஹிர் மற்றும் அமீர்ஜஹான் ஆகியோர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
முன்னதாக, கோவையில் கடந்த 1ஆம் தேதி அதிவேகமாக சென்ற சொகுசு கார் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு வாரத்திற்குள் சென்னையில் அதேபோல், அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.