கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல்லை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை - செங்கோட்டை, நெல்லை - நாகர்கோவில், நெல்லை - திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எதிரொலி காரணமாக இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் - திருச்சி, திருச்செந்தூர் - எழும்பூர் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியில் கடல் பகுதியில் காற்று வேகமாக வீசுவதால் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடல் காலநிலை சீரானதும் சேவை மீண்டும் தொடங்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.