தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி ஆனார்கள். 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்த அவர்களின் உறவினர்கள் அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட எழுத்துப்பூர்வமாக எழுதித் தர வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இரண்டு நிபந்தனைகளை விதித்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார், கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பொதுமக்கள் மீது தடியடியும் நடத்தியுள்ளனர். மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்ததால் தூத்துக்குடியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.