கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து நகை பறிக்கும் சம்பங்கள் அதிகரித்துவந்தன. இது தொடர்பாக புகார்களும் காவல்துறைக்கு வந்தகொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து கோவை துணை கமிஷனர் உமா மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இத்தனிப்படை போலீசார், நகை பறிப்பு குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இதில் கோவை வடவள்ளி ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியைச் சேர்ந்த விஜய் (24), ஆர்.எஸ்.புரம் மீனாட்சி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் குனியமுத்தூர், ரத்தினபுரி, சாய்பாபா காலனி, காட்டூர், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் நகை பறித்தது தெரியவந்தது. இவர்களைக் கைது செய்த போலீசார், 27 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் வாகனங்களில் சென்று நகைகளைப் பறித்துள்ளதாக தெரிகிறது. துடியலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நகை பறித்த வழக்கில் கைதான 2 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தவர்கள், மீண்டும் நகை பறிப்பில் ஈடுபட்டுவந்தனர். புறநகரில் போலீசார் தேடுவதை அறிந்து நகரப் பகுதியில் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தனர். பல்வேறு பகுதிகளில் இவர்கள் நகை பறித்து தப்பிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவை வைத்து அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.