சேலம் சரகத்தில் தகுதிச்சான்றிதழ் பெறாத 189 பள்ளி வாகனங்ளை இயக்கத் தடை விதித்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதற்கு முன்பே தனியார் பள்ளி பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் தணிக்கை செய்தனர்.
சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பள்ளி வாகனங்கள் முழுமையாக தணிக்கை செய்யப்பட்டன. வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் கதவுகள் உறுதியாக உள்ளதா? படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்தனர். சேலம் சரகத்தில் மொத்தம் 2906 வாகனங்கள் உள்ளன. இவற்றில் 2717 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 189 வாகனங்கள் தகுதிச்சான்று பெறவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தகுதிச்சான்று பெறாத வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களில் சிறு அளவில் கூட குறைகள் இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் தணிக்கை செய்திருக்கிறோம். இந்த வாகனங்களில் பயணிக்கும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பே முக்கியமானது. தகுதிச் சான்றிதழ் பெறாத வாகனங்களை இயக்க தடை விதித்துள்ளோம். சான்றிதழ் பெறப்பட்ட பிறகு வாகனங்களை இயக்கலாம். சில சின்ன சின்ன குறைகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறோம். அவற்றையும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக சரி செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.