18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யபட்ட தொகுதிகளின் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவுக்கக்கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும், தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் திமுக கொறடா சக்கரபாணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இவற்றில் 18 எம்.ஏல்.ஏ-க்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்த வழக்கிலும், சக்கரபாணி வழக்கிலும் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிகளும் உறுப்பினர் இல்லாமல் காலியாக இருப்பதால், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் முறையீடு செய்தார். தீர்ப்பை அறிவிக்க வேண்டும் அல்லது அந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்டு தலைமை நீதிபதி பேரவை நிகழ்வுகள் தொடர்பான வழக்குகள் படிப்படியாக விசாரிக்கப்பட்டுதான் வருகிறது, எனவே உங்கள் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுங்கள் விசாரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.