" ஜெயலலிதாவோட வைரம் இங்க இருக்காம்ல..! கோடிக்கணக்கான ரூபாய்னு பேசிக்கிறாங்க.. நம்ம ஊரிலுள்ள வியாபாரிகள் தான் வாங்கி வைச்சுருக்கிறதாக பேசிக்கிறாங்க." என்ற பேச்சு நகரத்து மக்களை சென்றடைந்து ஆச்சரியப்படுத்திய வேளையில், வியாழக்கிழமை இரவில் ஆரம்பித்து, தற்பொழுது வரை நீடித்திருக்கும் வருமானவரித்துறை சோதனையும் அந்த பேச்சுக்கு உயிரூட்டியுள்ளது.
பாரம்பரியத்திற்கும், தரத்திற்கும் என்றும் குறைந்ததல்ல செட்டிநாட்டு தங்க வைர ஆபரணங்கள். இத்தகையப் பெருமைமிகு செட்டிநாட்டு தங்க வைர ஆபரணங்களை இன்றுவரை தேடி பிடித்து வாங்காத பிரபலங்களே இல்லை எனலாம்.! அந்தளவிற்கு இங்கு வைர நகைகள் பிரசித்தம். பரந்து விரிந்த செட்டிநாட்டுப் பகுதி எனினும் தங்க வைர ஆபரணங்களுக்கான வணிக இடம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மட்டுமே.! இங்கு தான் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மும்பைக்கு இணையாக வைரங்களுக்கான சந்தை அதிகம். இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வைரங்கள் இவை என ஏறக்குறைய 2000 கேரட் எடையுள்ள வைரங்கள் காரைக்குடியில் விற்பனைக்காக வந்துள்ளது என்கின்ற செவிவழி செய்தி நகரமெங்கும் வேகமாக பரவி வந்தது. ஜெயலலிதாவோட வைரமா.? என்ற கேள்வி ஒரு பக்கம் இருப்பினும், அதனை வாங்க பலர் முயற்சியடைந்ததும் தகவலாக கசிந்தது.
இது இப்படியிருக்க, வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு வருமான வரித்துறை இணை இயக்குனர் பத்மாவதி தலைமையில் மதுரை, ராமநாதபுரம் மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் சுமார் 12 பேர் கொண்ட குழு, காரைக்குடி அம்மன் சன்னதியிலுள்ள தங்க வைர ஆபரணக்கடை, மகர்நோன்பு திடல் மற்றும் சூடாமணிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் என மூன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் தற்பொழுது வரை விடாமல் சோதனையிட்டு வருகின்றனர்.. தங்க வைர ஆபரண விற்பனையில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடை பெற்று வருவதாக கூறப்பட்டாலும் நீடிக்கும் இந்த சோதனை ஜெ-வின் வைரத்தை தேடியா.? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. இதே வேளையில், " இங்கு மட்டுமல்ல சோதனை..! குறிப்பிட்ட சிலர் மட்டும் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஜெயலலிதாவோட வைரங்களை வாங்கியிருக்க முடியாது. ஆதலால் மகர் நோன்பு அக்ரஹாரம், வடக்கு வல்லம்பர் தெரு, கல்லுக்கட்டி கிழக்கு மற்றும் கல்லுக்கட்டி வடக்குப் பகுதியிலுள்ள வியாபாரிகள் தொடர்பில் சோதனையிட்டால் உண்மை நிலை தெரியும் என்பதால் அங்கும் விரைவில் சோதனை நிச்சயம்." என்கின்றார் வருமான வரித்துறையிலுள்ள அதிகாரி ஒருவர். இதனால் இப்பகுதியிலுள்ள வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.