சுனாமி எனும் பேரலையில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் டிச. 26ஆம் தேதி, 17ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தில் மீனவர்களும், அரசியல் பிரமுகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதியை உலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது. சுனாமி ஆழிப்பேரலையால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரை இழந்த கோர தினம். கடலோர மாவட்டங்களில் ஒன்றான நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவை போற்றிவணங்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26ம் தேதி பொதுமக்களும், மீனவ மக்களும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் டிச. 26 நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகை ஆரிய நாட்டு தெரு, செருதூர், நாகூர், நம்பியார்நகரில் சுனாமியின் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதைப்போல் கீச்சாங்குப்பம் மீனவகிராமத்திலும் சுனாமியில் உயிர்நீத்தவர்களுக்கு உறவினர்கள் திதி கொடுத்து பிரார்த்தனை செய்தனர்.
அதே போல அக்கரைப்பேட்டையை சேர்ந்த நூற்றுகணக்கானோர் மெளன ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதுபோலவே நம்பியார் நகர் மீனவ கிராம மக்களும் ஊர்வலமாக சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பிலும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் அக்கரைப்பேட்டையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகை மாவட்டம் முழுவதுமே சுனாமி நினைவு தினத்தை பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் அனுசரித்தனர். சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் நாகை மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவர்களும் அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. உயிர் நீத்தவர்களுக்கு கடலில் பால் தெளித்து அஞ்சலி செலுத்தி ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொண்டனர்.
சுனாமி கோரதாண்டவத்தில் உயிரிழந்த 1000த்திற்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த சுனாமி ஸ்தூபி வேளாங்கன்னியில் உள்ளது. அங்கு ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தியை ஏந்தி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வேளாங்கன்னி பேராலய அதிபர் அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி சுனாமியால் உயிரிழந்தவர்கள் நினைவு ஸ்தூபியில் நடைபெற்றது.