திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் தினந்தோறும் பல்வேறு நாடுகளிலிருந்து விமானங்கள் வந்துசெல்கின்றன. அதேசமயம், தங்கம் கடத்திவரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இதனைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (15.11.2021) காலை 6 மணி அளவில் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்த சுரேந்திரன் என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை அழைத்து சோதனை செய்தனர்.
அதில், அவர் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டை சோதனை செய்தனர். அப்போது, அதில் சுரேந்திரன் மறைத்து எடுத்துவந்த 1.75 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் சுரேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.