காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை மகள் கொல்ல முயன்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே வசித்து வருபவர்கள் வேணுகோபால் பாண்டியன் - உமா மகேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த தனது மூத்த மகளை காதல் விவகாரம் தொடர்பாக வேணுகோபால் பாண்டியன் கண்டித்து அடித்துள்ளார். இதனையறிந்த அவரது பாட்டி வேணுகோபால் பாண்டியனைக் கண்டித்து 16 வயது தனது பேத்தியைப் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சில மாதங்கள் தங்கியிருந்த நிலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கூறி அவரது பெற்றோர் அழைத்தும் சிறுமி வரவில்லை.
இந்த நிலையில்தான் பெரியகுளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முத்து காமாட்சி என்பவருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளது. மேலும் முத்து காமாட்சி சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியில் சுற்றி வந்துள்ளார். இந்த விவகாரம் தந்தை வேணுகோபால் பாண்டியனுக்குத் தெரிய வந்ததையடுத்து சிறுமியை அழைத்துக் கண்டித்துள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட முத்து காமாட்சி, வேணுகோபால் பாண்டியனை மிரட்டியுள்ளார். இதனிடையே சிறுமி தன்னை வேறு ஒரு பள்ளியில் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொண்டதால் அவரை பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 11 ஆம் வகுப்பில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து சிறுமி தொடர்ந்து தனது பெற்றோருக்குத் தெரியாமல் முத்து காமாட்சியிடம் செல்போனியில் பேசி வந்திருக்கிறார். பின்பு அவரது பெற்றோர் முத்து காமாட்சியின் தொடர்பைத் துண்டித்து விடுமாறு சிறுமியைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனையடுத்து தனது காதலுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் வேணுகோபால் பாண்டியனைக் கொலை செய்ய சிறுமியின் உதவியுடன் திட்டமிட்டுள்ளார் முத்து காமாட்சி. நேற்று இரவு வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, திட்டமிட்டபடி முத்து காமாட்சி மற்றும் அவரது நண்பர்களான செல்வக்குமார், கண்ணப்பன் ஆகியோருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளனர். வேணுகோபாலின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரைப் பார்த்து முத்து காமாட்சி மற்றும் அவரது நண்பர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த வேணுகோபாலை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வேணுகோபாலின் மனைவி உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் முத்து காமாட்சி, அவரது நண்பர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.