கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து நெய்வேலி குற்றப்பிரிவு போலீசார், மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டதில் அவரிடமிருந்து 2 மூட்டை குட்காவை பறிமுதல் செய்தனர். அப்போது கைது செய்யப்பட்ட லட்சுமிகாந்தன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட அரிகேரி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் குட்காவை கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் நெய்வேலி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, சோதனை மேற்கொண்டபோது விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதி, புறவழிச்சாலையில் வந்த பொலிரோ காரை பரிசோதனை செய்தனர். சோதனையில் காரில் ரகசிய அறை உள்ளதை கண்டுபிடித்த காவல்துறையினர் ரகசிய அறையை சோதனை செய்தபோது 1.5. டன் எடை கொண்ட 30 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காரில் கடத்தியது தெரிய வந்தது.
உடனடியாக நெய்வேலி குற்றப்பிரிவு போலீசார் கார் மற்றும் காரில் இருந்த குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட காரின் உரிமையாளர் அரிகேரி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்தது. இவர் தொடர்ச்சியாக காய்கறி ஏற்றுவது போல், குட்கா பொருட்களை கடத்துவதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.