Skip to main content

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

15 Rameswaram fishermen freed

 

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 8 ஆம் தேதி உரிய அனுமதிச் சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இதையடுத்து நெடுந்தீவு அருகே இரு படகுகளில் 15 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு இரு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தனர்.

 

இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 15 மீனவர்களையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரியும், கடந்த 10 ஆம் தேதி  அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், “இந்திய - இலங்கை இடையிலான கடல் பகுதியை நம்பி பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உள்ளனர் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவார். எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமையைக் காக்கவும் சுமுக தீர்வு காண வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையின் செயல் மீனவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின் மூலம் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேச உள்ளார். முன்னதாக பிரதமர் மோடியை இலங்கை அதிபர் விக்ரமசிங்கே சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்