கடந்த 22 ஆம் தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் 15 இடங்களில் இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் 5 சம்பவங்கள் கோவையில் நிகழ்ந்துள்ளது. இதன்காரணமாக கோவையில் முக்கிய இடங்களில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 1700 போலீசார் வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவரை கூட போலீசார் கைது செய்யாத நிலை தொடர்ந்து வருகிறது. கோவை மட்டுமல்லாது திண்டுக்கல், ராமநாதபுரம், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பாஜக பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மத தலைவர்களுடன் கோவை ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதேபோல் கோவை காவல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்று கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார். விரைவில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான நபர்கள் கைது செய்யப்படுவர் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல இடங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், திருவாரூரில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.