கடந்த மே 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட வந்தனர். செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர், உறவினர்கள், ஆதரவாளர்கள் இடங்களில் சோதனை நடத்தினர். அந்த வகையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சோதனை செய்யவந்த வருமான வரித்துறை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி, பெண் அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
அதேபோல செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது, வருமான வரித்துறை அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். திமுகவினரால் தாக்கப்பட்டு சோதனைக்கு வந்த பெண் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி 15 பேரைக் கைது செய்தனர். அதில் இரண்டு மாமன்ற உறுப்பினர்களும், திமுக நிர்வாகிகளும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும் அடங்குவார்கள்.
திமுக சார்பில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி அம்பிகா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஜாமீன் தரக் கூடாது என வாதம் முன்வைத்த நிலையில், ஒன்பது நபர்களுக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வருமான வரித்துறையினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையில், வருமான வரிச் சோதனையின் போது, அதிகாரிகளைத் தாக்கியது; ஆவணங்களை எடுத்துச் சென்றது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் மற்றும் முன்ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட அனைவரும் மூன்று நாட்களில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதன் அடிப்படையில் கரூர் நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தது. இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று திமுகவைச் சேர்ந்த 15 நபர்களும், முன்பு தீர்ப்பு வழங்கிய முதன்மை அமர்வு நீதிபதி அம்பிகா முன்பு ஆஜராகி உள்ளனர்.