பத்திரப் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் சொந்த கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்த ஆண்டில் ஏற்கெனவே 44 புதிய அரசு கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி வழங்கி அரசாணைகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ. 27.48 கோடி மதிப்பில் மேலும் 15 புதிய அரசு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கி கடந்த 17 ஆம் தேதி அன்று அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி மொத்தம் 15 புதிய கட்டடங்களில் தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அப்பகுதியிலேயே உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய சொந்த கட்டடமும் கட்டப்பட உள்ளன. அதே சமயம் நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களான கள்ளிக்குடி, திருமங்கலம், வலங்கைமான், விளாத்திகுளம், திருப்போரூர், பென்னாகரம், உப்பிலியாபுரம், நெல்லிக்குப்பம், விராலிமலை, முசிறி, காட்டுப்புத்தூர், அவினாசி, குன்னத்தூர் மற்றும் கயத்தாறு ஆகிய 14 சார்பதிவாளர் அலுவலகங்களின் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய வடிவமைப்புடன் கூடிய சொந்த கட்டடங்களும் கட்டப்பட உள்ளன. வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் செயலாளர் தெரிவித்துள்ளார்.