எல்ஐசியில் இருந்து பேசுவதாகக் கூறி பெண் குரலில் பேசி மூதாட்டி ஒருவரிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அபகரித்த மூன்று பேரை தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிமெட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் கடந்த ஆண்டு தொலைபேசியில் பேசிய ஒரு பெண் மூதாட்டியின் கணவரின் எல்ஐசி பாலிசி முதிர்வு தொகையை வரவு வைப்பதாகக் கூறி வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்டுள்ளார். மூதாட்டியும் அதனை நம்பி வங்கி விவரங்களை அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு மூதாட்டியின் மொபைல் போனுக்கு வந்த ரகசிய எண்ணையும் கேட்டுள்ளார். அதனையும் மூதாட்டி அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த மூதாட்டியின் வங்கிக் கணக்கிலிருந்து ஐந்து தவணைகளாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாயமானது. இதுகுறித்து மூதாட்டி போலீசில் புகார் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக வில்சன் குமார், சதாசிவம், முருகன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் குரலில் எல்ஐசியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கின் விவரங்களை தெரிந்து கொண்டு பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்தது.