தர்மபுரி அருகே, வங்கியில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி பட்டதாரி இளைஞரிடம் 15 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்த பெண் உள்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ரேகட அள்ளியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவருடைய மகன் காந்தி (34). பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், சரியான வேலை கிடைக்காததால் கட்டட வேலைக்குச் சென்று வருகிறார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த சர்வதேச மக்கள் உரிமைக் கழகத் தலைவர் கவிதா ராமதாஸ் என்பவர், சில மாதங்களுக்கு முன்பு காந்தியை அணுகியுள்ளார். அவரிடம், தேசிய வங்கி ஒன்றில் நன்னடத்தை அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அந்த வேலையை வாங்கித் தருவதாகவும் கூறி, 15 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் மாதக்கணக்கில் ஆகியும் அந்த வேலையை கவிதா ராமதாஸ் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காந்தி, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். டிஜிபி அலுவலக உத்தரவின் பேரில், காந்தியிடம் மோசடி செய்ததாக கவிதா ராமதாஸ், அவருடைய கணவர் வினோத் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.