சென்னை அடுத்த தாம்பரம் அருகே நகைக்கடையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கம் பகுதியில் உள்ள தங்க நகைக் கடை ஒன்றில் அதிகாலை நேரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக கடை நிர்வாகம் தரப்பில் போலீசாரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில் கடையில் கொள்ளையடித்தது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நகைக்கடை அருகிலேயே உள்ள ரோஸ் மில்க் கடையில் வேலை பார்த்து வந்த வடமாநில சிறுவர்கள் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சில மணி நேரத்திலேயே மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் ''விசாரணையில் சிசிடிவி காட்சிகளை வைத்துப் பார்த்த பொழுது அருகில் இருக்கிற சந்தேகப்படக்கூடிய நபர்களை எல்லாம் விசாரணை செய்ததில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டது. இதில் 16, 17 வயதில் மூன்று சிறுவர்கள் உள்ளனர். இவர்கள் அசாமிலிருந்து இங்கே வேலை செய்வதற்காக வந்திருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது'' என்றார்.