சிதம்பரம் நகரில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாத காலத்திற்கு தடை விதித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவில், "கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் மற்றும் நகரம், ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயிலில், கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டக் குழுவினரால், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பல்வேறு நீதிமன்ற ஆணைகள் மற்றும் அரசாணைகளைத் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்நிகழ்வு தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பேரில் இறுதி முடிவு எடுக்கும்பொருட்டு, பல்வேறு நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
எனவே, அரசின் முடிவினை எதிர்நோக்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர பல்வேறு போராட்ட குழுவினர்கள் அரசின் முடிவு வரும் விரைவில் எவ்வித போராட்டங்களோ, ஆர்பாட்டங்களோ, கூட்டமாகக் கூடி ஆலோசனை மேற்கொள்ளுதலோ ஒரு மாத காலத்திற்கு செய்தல் கூடாது என இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144- ன் படி தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வுத்திரவு இன்று (24/03/2022) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது." இவ்வாறு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கோரி போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.