நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த சிறிய ரக லாரி ஒன்றை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1,425 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, தங்க சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.