சேலம் அருகே போலி நகைக்கடன்கள் வழங்கியதில் 1.39 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட புகாரின்பேரில், கூட்டுறவுச் சங்கத்தின் உதவி செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கிவருகிறது. இந்த சங்கத்தில், நகைக்கடன்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கடந்த 2017ஆம் ஆண்டு புகார்கள் கிளம்பின.
இதுகுறித்து விசாரிக்க, சேலம் மண்டல கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். அலுவலர்கள் நடத்திய தணிக்கையில், இறந்த உறுப்பினர்களின் பெயர்களிலும், சங்க உறுப்பினர்களின் பெயர்களிலும் 1.39 கோடி ரூபாய்க்குப் போலி ஆவணங்கள் மூலம் நகைக்கடன் வழங்கி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
யார் யார் பெயரில் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதோ அவர்களின் வீடுகளுக்கு கூட்டுறவுத்துறை சார்பதிவாளர்கள் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். உறுப்பினர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயர்களில் நகைக்கடன் வழங்கியதாக நூதன முறையில் மோசடி செய்துள்ளனர்.
உறுப்பினர்களிடமிருந்து நகைக்கடன்களுக்கான அசல், அதற்கான வட்டி, அபராத வட்டித்தொகை வசூலிக்கப்பட்டதாக ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால், அதற்கான தொகை சங்கத்தின் வங்கிக் கணக்கில் இருப்பில் இல்லை.
இந்த முறைகேடுகள் தொடர்பாக சங்கச் செயலாளர் வள்ளியண்ணன், உதவிச் செயலாளர் தங்கராசு, நகை மதிப்பீட்டாளர் அமுதா ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதன்பிறகு கூட்டுறவு சங்க விதிகள் பிரிவு 81ன் கீழ் உள்ளீட்டு விசாரணை நடந்துவந்தது. இதில், பூசாரிப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் நடந்துள்ள மோசடிகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து, இந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்டதாக உதவிச் செயலாளர் தங்கராசுவை நிரந்தர பணிநீக்கம் செய்து, சங்கத்தின் தலைவர் அம்மாசி உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும், அப்போதிருந்த சங்கத் தலைவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்ட சங்கத்தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோருக்குச் சொந்தமான 5 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் குண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைக்கடன் மோசடி செய்ததாக, அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் பெரியசாமி, எழுத்தர் ரகுமணி, நகை மதிப்பீட்டாளர் சேட்டு ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.