Published on 29/06/2018 | Edited on 29/06/2018
நெல்லை மாவட்டத்தின் அம்பை அருகேயுள்ள வி.கே.புரத்தில் உள்ளது 1880ல் தொடங்கப்பட்ட மெஜூரா கோட்ஸ் ஆலை. அங்கு மூன்று ஷிப்ட்டாக மூவாரயித்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு தொழிற்சங்கங்களின் யூனியனும் உண்டு. நூல் நூற்பு மற்றும் அவைகள் பிளீச்சிங் செய்யப்பட்டு டையிங் செய்யப்படுகிறது.
இந்த தொழிற்சாலையின் கழிவு நீர் அருகில் ஒடுகிற தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரின் வாய்க்காலில் கலப்பதாக அரசுக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் புகார் மனுக்கள் சென்ற நிலையில் நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருந்தது.
இதனிடையே ஆலையால் நிலத்தடி நீர் மாசுபடுவதான குற்றச் சாட்டையடுத்தும் அதன் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதையும் சுட்டிக் காட்டியும் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டித்து விட்டது.
இதன் காரணமாக இரவு ஷிப்ட் மற்றும் இன்று காலை நேர ஷிப்ட்கள் இயங்க முடியாமல் ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பால் தவிக்கத் தொடங்கியுள்ளனர். பழமையும் புராதனமிக்க இந்த ஆலை அடைக்கப்பட்டது அம்பை ஏரியாவை அதிர்ச்சியாக்கியுள்ளது.