கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.
இந்நிலையில்உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் விவரம்: சுரேஷ், பிரவீன், சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி.