ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்பட்ட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், வெங்காயத்தின் புழக்கத்தை அதிகரிக்கவும் சில்லறை வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் கடந்த வாரம் கிலோ 90 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயம் தற்போது 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல 120 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெங்காய விலை உயர்வின் காரணமாக நட்சத்திர விடுதிகளில் பிரியாணியின் விலை 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.