கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட சூழலியல் போராளி முகிலன் 261 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் மண், மணல், காவிரி போன்ற பிரச்சனைகளுக்காகவும் பலமுறை சிறையில் உண்ணாவிரதம் இருந்துள்ளார். கடைசியாக கடந்த மாதம் முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர் இன்று 5ம் தேதி காலை முதல் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
அவரது கோரிக்கைகளாக.. கூடன்குளத்தில் ஒரு லட்சம் மக்கள் மீது போடப்பட்ட 132 வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொலை செய்த அதிகாரிகள் மற்றும் இந்த கொலைகார அரசு பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான அனைத்து துறை அதிகாரிகள், ஆட்சியில் இருப்பவர்கள் மீது இ.த.ச பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். 48ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து அணுக்கதிர்களை வீசி பாதிப்புகளை ஏற்படுத்தும் அணுக்கழிவுகளை கூடன்குளத்திலிருந்து உடனடியாக மக்களுக்கு பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மலம் துடைக்ககூட பயன்படாத அரசாணையை தூக்கி எறிந்து விட்டு இந்திய தமிழக அரசுகள் இணைந்து சிறப்புச்சட்டம் கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும். காவிரி ஆணையம் என்று வெறும் கண்துடைப்புக்காக தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் ஆணையம் அமைத்த மத்திய அரசை கண்டித்தும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
Published on 05/06/2018 | Edited on 05/06/2018