“தமிழகத்தையே உலுக்கிவரும் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையோ காப்பாற்றுவதில் தீவிரமாக இருக்கிறது பொள்ளாச்சி டவுண் காவல்நிலையம். ஆன்லைனிலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது. நீங்களே பார்த்துக்கொள்ளலாம்..” என்றார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்வேல்.
“23-2-2019 அன்று அந்தக் காவல் நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கை எண் 58-ஐயும், 26-2-2019 அன்று பதிவான முதல் தகவல் அறிக்கை எண் 60-ஐயும் ஆன்லைனில் பார்க்கமுடிகிறது. ஆனால், பாலியல் தொந்தரவு செய்தல், வழிப்பறியில் ஈடுபடுதல், விருப்பம் இல்லாமல் பெண்களை ஆபாச படம் எடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகிய நால்வர் மீது பதிவான முதல் தகவல் அறிக்கை எண் 59-ஐ மட்டும் ஆன்லைனில் பார்க்க முடியவில்லை. ஏனோ, பிளாக் செய்துவிட்டனர்.” என்பதே கதிர்வேலின் ஆதங்கமாக இருக்கிறது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இன்டர்நெட் வேகக்குறைவு போன்ற காரணங்கள் இருந்தால், 48-லிருந்து 72 மணி நேரத்துக்குள்ளாவது பதிவு செய்ய வேண்டும் என காலவரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு (முதல் தகவல் அறிக்கை எண் 59) இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரியிடம் பேசினோம். “யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கமெல்லாம் நிச்சயம் காவல்துறைக்கு இருக்க முடியாது. பாலியல் வழக்குகள், குழந்தை தொடர்பான வழக்குகள், தீவிரவாத தொடர்பு போன்ற வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை சிசிடிஎன்எஸ் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்வதில்லை. ஊழல்தடுப்பு பிரிவு, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பினர் பதிவு செய்யும் வழக்குகளும் இதில் அடக்கம். இவற்றை, பொதுமக்கள் இணையத்தில் பார்க்க முடியாது. அந்த வகையில்தான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரி பிளாக் செய்திருக்கிறார்.” என்றார்.
பொதுவான பிரச்சனையிலும் விழிப்புணர்வோடு கதிர்வேல் போன்றவர்களுக்கு சந்தேகம் எழுவது ஆரோக்கியமானதே!