சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 13 மணி நேர விசாரணைக்குப் பிறகு தற்பொழுது அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து அறிந்த அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்துள்ளனர். ஏற்கனவே அவரது இல்லத்தில் முழுமையாக விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவருடைய காரிலேயே அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.