Skip to main content

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து!- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

chennai high court judgements  tamilnadu government


அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழக அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சம்மந்தமாகப்  பேசியது குறித்து, அவ்வப்போது அவதூறு வழக்குகளைத் தமிழகம் முழுவதும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வருகிறது. தலைவர்களின் கருத்துகளை வெளியிட்டு தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தினமலர், முரசொலி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நக்கீரன் ஆகியவற்றின் மீதும் அவற்றின் ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகிகள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. 
 


அதன்படி, 2012- ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி முரசொலி நாளிதழ் மீது 20 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, நக்கீரன் மற்றும் தினமலர் மீது தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. தமிழக அரசின் அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் தொடர்ந்த வழக்குகள், மக்கள் பிரதிநிதிகள் வழக்கு என்பதால் தனியாக பிரிக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணையில் உள்ளது.

அதுபோல், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், அதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரியும், தி ஹிந்து தரப்பில் என்.ராம், கோலப்பன், பத்மநாபன், சித்தார்த் வரதராஜன் ஆகியோரும், நக்கீரன் தரப்பில் கோபால், முரசொலி தரப்பில் செல்வம், தினகரன் தரப்பில் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியா தரப்பில் சுனில் நாயர், சந்தானகோபாலன், தினமலர் தரப்பில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
 


 


நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக, இந்த வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. முன்னர் நடைபெற்ற வாதங்களைப் பார்க்கும்போது, தலைவர்களின் கருத்துகளைப் பதிவு செய்யும் விதமாகப் பத்திரிகையில் செய்தி வெளியிடும்போது, அந்தக் கருத்துகளின் அடிப்படையில் தங்கள் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாகவும், இது பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனைச் சட்டமாகும். இச்சட்டத்தை, தமிழக அரசு கடைப்பிடித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படது. மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாகச் செய்திகள் போடப்பட்டால், அவதூறு வழக்கு தொடரப்படுகிறது என்றும் வாதிடப்பட்டது.

நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், தனி நபர் மீது விமர்சனம் செய்து கருத்துகள் வெளியிட்டாலும், அரசின் செலவில்தான் இந்த அவதூறு வழக்குகள்  பதியப்படுகிறது. அதனால், மக்கள் வரிப்பணம்  வீணடிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
 

http://onelink.to/nknapp


இந்து குழுமம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அதிகளவில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாகக் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அனைத்து வழக்குகளின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நிலையில், இன்று (21/05/2020) தீர்ப்பு வழங்கினார். 

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



 

 

சார்ந்த செய்திகள்