நீர்த்தேக்க தொட்டி மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே நீர் கசியும் நிலையில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய அரசின் 'அம்ரு' திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் வடக்கு வாசல் ஏழாவது வார்டு பகுதியில் சுமார் ஒரு 1.20 கோடி ரூபாய் செலவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்காக காத்திருக்கும் இந்த நீர் தொட்டியில் சோதனை முறையாக நீரானது நிரப்பப்பட்டது. அப்பொழுது தொட்டியைச் சுற்றிலும் நீர்க்கசிவு ஏற்பட்டது.
தரமற்ற முறையில் கட்டுமானம் இருப்பதால் நீர் கசிவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதேபோல் 20 இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அவற்றையும் ஆய்வுசெய்து அவற்றின் கட்டுமானங்களை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மேயர் சார்பில், 'கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த தொட்டிகள் கட்டப்பட்டது. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சோதனை செய்யப்பட்டது. முறையாக சீரமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். எனவே மக்கள் யாரும் அதிருப்தி அடைய வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.