திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் ஏரிகோடி பகுதியைச் சேர்ந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன். இவரது மூத்த மகன் ஆஷிஸ்(12). இவர், ஆம்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு மழை பெய்த நேரத்தில் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்று மழையில் நனைந்தபடி வீட்டிற்கு வந்த சிறுவன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஈரமான கைகளால் டிவி சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக சிறுவனை வீட்டின் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுவனின் உடலை வீட்டிற்குக் கொண்டு சென்ற உறவினர்கள் இறுதிச் சடங்குக்காக ஏற்பாடு செய்து வந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் காவல்துறையினர் விரைந்து சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் ஆஷிஸின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலம் தொடங்கும்போது மின்சார வாரியத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும். "மழைக்காலங்களில் ஈரமான கைகளோடு சுவிட்ச் பாக்ஸ்களில் கைவைக்காதீர்கள், மின்கம்பங்களைத் தொடாதீர்கள், மின்சார ஒயர் அறுந்துவிழுந்த பகுதிக்கு அருகில் செல்லாதீர்கள், மின்கம்பத்தை ஒட்டிச்சொல்லும் மரங்கள் உள்ள பகுதிகளில் நிற்காதீர்கள்" என விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் தருவார்கள், தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அப்படி எந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் அந்தளவுக்குச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.