வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்தின் தொடக்க கல்வி அதிகாரியாக செயலாற்றி வருபவர் மோகன். இந்த ஒன்றியத்தில் சுமார் 150 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், பள்ளியின் கட்டிடத்தன்மை போன்றவற்றை ஆய்வு செய்து உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டியது இந்த அதிகாரியின் பணி.
கடந்த செப்டம்பர் 12ந்தேதி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் இயங்கிவரும் தொடக்கப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்படி ஆய்வுக்கு சென்ற அதிகாரிக்கு அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒன்று சேர்ந்த சைவம் – அசைவம் என விதவிதமான உணவுகளை வரவைத்து தடபுடலாக விருந்துவைத்துள்ளனர்.
பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் டேபிள், சேர் போட்டு அவருக்கு அந்த உணவுகளை பறிமாறியுள்ளனர், அந்த அதிகாரியும் ருசித்து, ருசித்து உண்டுள்ளார். விருந்து முடிந்தபின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் என அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு உள்ளனர். இந்த புகைப்படங்களை ஆசிரியர்கள் தங்களுக்குள் உள்ள வாட்ஸ்அப் குரூப் வழியாக பறிமாறிக்கொண்டது, தற்போது பொதுதளத்திலும் அந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யச்சொன்னால், வகுப்பறையில் விதவிதமான உணவை ஆய்வு செய்துவிட்டு வந்துள்ளார் என சக அதிகாரிகள் கிண்டல் செய்ய நொந்துப்போய் உள்ளார் அந்த அதிகாரி. ஆசிரியர்கள் தவறு செய்தால் அதை கண்டித்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரியே பள்ளியில் அவர்கள் தந்த விருந்தை உண்டுவிட்டு வந்துள்ளதைப்பற்றி வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.