விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக பிப்ரவரி முதல் வாரத்தில் கூட்டணி இறுதி முடிவை அறிக்கும் திட்டத்தில் உள்ளது அதிமுக. ஆகையால்தான் 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் ரூபாய் 25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுவை 4ஆம் தேதி முதல் அளிக்கலாம் என்று ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேலும் கூட்டணி கட்சிகளிடம் பேசிய அதிமுக தேர்தல் குழு விரைவில் முடிவை சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளது. தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் வெளிப்படையாக சொல்லவில்லை. இருப்பினும் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இடம் பெற வாய்ப்புள்ளது என்றும், இதில் பாஜக தொகுதிகளை அதிகம் கேட்பதால்தான் கூட்டணி முடிவாகாமல் இழுத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்போதே அதிமுக சார்பில் விருப்பமனு பெறப்படும் என்று அறிவித்துள்ளதால், அதிமுக தனித்து போட்டியிடுமா? நம்மை கழட்டிவிடுமா என்ற அச்சத்தில் உள்ளன பேச்சுவாத்தையில் உளள கட்சிகள்.
கருத்து கணிப்புகளால் அதிர்ச்சியாகியுள்ள ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோர், எக்காரத்தைக் கொண்டும் அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுத்தரக்கூடாது என்று தேர்தல் குழுவிடமும், தேர்தல் அறிக்கை மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும் என்றும் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவிடமும் அறிவுறுத்தியுள்ளனராம்.