வடமாநிலங்களில் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால், துவரை, உளுந்தம் பருப்பு விலைகள் மூட்டைக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை வியாபாரிகள் கூறுகையில், ''நாட்டின் மொத்த துவரம் பருப்பு உற்பத்தியில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் 50 சதவீதம் பூர்த்தி செய்கிறது. தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் தான் துவரை அதிகளவில் பயிரிடப்படுகிறது. அதேபோல் உளுந்து பயிரிடுவதிலும் வட மாநிலங்களே முன்னணியில் இருக்கின்றன.
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் புது துவரை, உளுந்து வரத்து அதிகளவில் இருக்கும். அவை ஜனவரி மாதம் விற்பனைக்குச் செல்லும். சமீப காலமாக வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் வடமாநிலங்களில் பருப்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கடந்த ஒன்றரை மாதத்தில் துவரம் பருப்பு விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரையும், 100 கிலோ கொண்ட மூட்டை 1000 ரூபாய் வரையிலும் உயர்ந்திருக்கிறது. ஒன்றரை மாதத்திற்கு முன்பு துவரம் பருப்பு கிலோ 80 முதல் 85 ரூபாய் வரை விற்கப்பட்டது. இப்போது 90 முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிலோ 85 முதல் 95 ரூபாய் வரை இதுவரை விற்கப்பட்டு வந்த உளுந்தம் பருப்பு, கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 95 முதல் 105 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரை இதே விலை நீடிக்கும் எனத் தெரிகிறது,'' என்றனர்.