Skip to main content

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

10th student passes away in salem after public exam result

 

தாரமங்கலம் அருகே, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கங்காணியூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருடைய மகன் திருபின் (15). கே.ஆர்.தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியானது. 

 

பொதுத்தேர்வில் திருபின் தோல்வி அடைந்துவிட்டார். தேர்வு முடிவை பார்த்து  அதிர்ச்சி அடைந்த திருபின், பெற்றோரிடம் எதுவும் பேசாமல் வீட்டிற்குள் புகுந்து தனது அறைக்கதவை சாத்திக் கொண்டார். இதைப் பார்த்து பதற்றம் அடைந்த பெற்றோர், கதவை தட்டியுள்ளனர். ஆனால் திருபின் கதவைத் திறக்கவில்லை. 

 

அக்கம்பக்கத்தினர் துணையுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு திருபின் படுக்கை அறையில், மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட பெற்றோர்கள் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் சிறுவன், வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. 

 

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்