Skip to main content

பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
10th class school student made a decision in thirupattur

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி.  இவருடைய மனைவி சைலா. இந்த  தம்பதியினருக்கு குணசேகரன் (22) லாவண்யா (17) யுவராஜ் (15) என இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளன. மூன்றாவது மகனான யுவராஜ் , அப்பகுதியில் உள்ள கே.பந்தரப்பள்ளி அரசு பள்ளியில் ஒன்பதாவது முடித்துவிட்டு தற்போது பத்தாவது சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் (10-06-24) பள்ளி திறக்கப்பட்டதன் காரணமாக யுவராஜ் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், குறைவாக மதிப்பெண்ணை எடுத்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார். அதில் யுவராஜின் தாயும் பள்ளிக்குச் சென்றுள்ளார். சைலா, தனது மகனை இனிமேல் நன்றாக பார்த்துக் கொள்கிறேன் மேலும் அவரை ஒழுங்காக படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற சைலா தனது மகனுக்கு அறிவுரைகளை கூறியதாக தெரிகிறது. இந்த அறிவுரைகளை கண்டிப்பதாக எடுத்துக்கொண்ட மகன் யுவராஜ், தனது வீட்டில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, வீட்டில் மயங்கி விழுந்த யுவராஜைக் கண்ட அவரது பெற்றோர்கள்,  108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பேரில், உடனடியாக வந்த ஆம்புலன்ஸ், யுவராஜை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,  அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு  மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனாலும் யுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தற்போது இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வுகளை கொடுக்க வேண்டும். தற்போது இருக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொடுக்கும் அறிவுரைகளை கண்டிப்பதாக  எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயல்கின்றனர். மேலும் இருபாலர் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் திருமணமே என்னவென்று தெரியாத வயதில் காதல் வயப்பட்டு  திருமணம் செய்ய ஆசைப்படுகின்றனர். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் செல்போனுக்கு அடிமையாகி அதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை மாவட்ட கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்