ஏழை எளிய மக்களின் உயிர் காக்க அவசர தேவைகளுக்காக 108 ஆம்புலன்ஸ்களை அரசு ஏற்படுத்தியது. இந்த சேவை மக்களுக்கான பேருதவியாக இருந்து வருகிறது.
இந்த சேவையின் பராமரிப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அதற்கான தொகையையும் அரசாங்கம் வழங்கி வருகிறது. ஆனால் சேவை நிறுவனம் 108 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை கூட சரியாக வழங்குவதில்லை என கூறப்படுகிறது. அதே போல 108 வாகனங்களையும் சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தாலும். அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கவனத்தில் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சில 108 ஆம்புலன்ஸ்களில் டயர்கள் தேய்ந்து கிழிந்து உள்ளதாகவும், அந்த டயர்களை வைத்தே அவசர உதவிக்கு இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டயர் மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டால் ஒப்பந்த நிறுவனம் கண்டுகொள்வதில்லையாம். அதுமட்டுமல்லாமல் டயர் பஞ்சரானால் ஓட்டுநர்களே பொறுப்பேற்று கடிதம் கொடுக்க வேண்டியுள்ளதாம்.
இது குறித்து 108 ஊழியர்கள் கூறும் போது, “பணி நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒப்பந்த நிறுவனம் கண்டு கொள்வதில்லை. பல வாகனங்களில் டயர்கள் கிழிந்திருந்தாலும் குறிப்பிட்ட கிலோ மீட்டரில் மாற்றாமல் அதையே பயன்படுத்தச் சொல்கிறார்கள். இதனால் விபத்துகள் தான் ஏற்படுகிறது. அவசரத்திற்கு செல்லமுடியவில்லை. அமைச்சர்கள் தொகுதிகளிலேயே இப்படியான நிலையில் தான் 108 வாகனங்கள் உள்ளது” என்கின்றனர்.