கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி, நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமியை வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 10ஆம் தேதி அதிகாலை அழைத்துச் சென்றனர்.
அப்போது ஹரி பெருமானூர் ஏரிக்கரை அருகே ஆம்புலன்ஸ் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி மரத்தில் மோதியதில் கர்ப்பிணிப் பெண் ஜெயலட்சுமி, அவரது மாமியார் செல்வி, அவரது நாத்தனார் அம்பிகா ஆகிய மூவரும் ஏற்கனவே உயிரிழந்தனர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கலியமூர்த்தி, உதவியாளர் தேன்மொழி, சிகிச்சைக்கு உடன்சென்ற ஆஷா, பணியாளர் மீனா ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தனர்.
இதில் ஆஷா, பணியாளர் மீனா இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மீனா நேற்று முன்தினம் (15.06.2021) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது 108 ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. மேலும், மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, பணியாளர் மீனா குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்தக் குடும்பத்தினர் அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.