தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விஸ்வரூபம் எடுத்து மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி, உலகத்தரம் வாய்ந்த கல்வி என அடுத்தடுத்து கல்வித் தரத்தை உயர்த்துவதாக சொல்லி பெற்றோர்களிடம் நம்பிக்கை விதைத்து தங்கள் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி வருகிறார்கள்.
இப்படி தனியார் பள்ளிகளின் அதிரடியான திட்டங்களுக்கு போட்டி போட முடியாமல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அரசுப்பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் பணியிடங்களில் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள இடங்களில் உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு பின் ஆசிரியர் இல்லாமல் காலியாக உள்ள பணியிடங்கள் சேகரிக்கப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாட ஆசிரியர்களின் 107 பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்தப் பணியிடங்களை கல்வித்துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். இந்த பணியிடங்கள் காலி இடங்களாக இனி கருத முடியாது. மேலும் புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைவதும், ஆசிரியர்களின் பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதும் தனியார் பள்ளிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இன்னும் உருவாக்கும் என சமூகநல ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.