கடந்த ஒன்றாம் தேதி சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் ரூபாய் 1000 கோடிக்கு மேல் விற்பனையைக் குறைத்து காட்டியுள்ளதாக வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் கடைகளை நடத்திவரும் சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனம் மீது வருமானவரித்துறையினருக்குப் புகார் வந்ததையடுத்து கடந்த 1 ஆம் தேதி முதல் மொத்தம் 37 இடங்களில் சோதனை நடைபெற்றது.
நடத்தப்பட்ட சோதனையில் விற்பனை விவரங்கள் சரியாக பதிவு செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை விவரங்களை மறைத்துள்ளனர். கணக்கில் காட்டப்படாத அந்த தொகையின் மூலம் பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளனர். கணக்கில் காட்டாமல் தங்கத்தையும் வாங்கியுள்ளனர். இரண்டு நிறுவனங்களிலிருந்தும் 10 கோடி ரூபாய் பணம், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.