உலக சாதனை முயற்சியாக இந்தியா முழுவதிலுமிருந்து பள்ளி மாணவர்கள் தயாரித்த ஃபெம்டோ செயற்கைக்கோள் எனப்படும் 100 மிகச் சிறிய செயற்கைக்கோள்கள் ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து ஹீலியம் பலூன் பயன்படுத்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த பயிற்றுவித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தி மார்ட்டின் குழுமம், ராமேஸ்வரத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் கலாம், விண்வெளி மண்டல இந்தியா (Space Zone India ) மற்றும் டாக்டர் ஆ ப ஜெ அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இந்த முயற்சியை முன்னெடுத்தன.
'டாக்டர் ஆபஜெ அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி பேலோட் க்யூப்ஸ் சவால் 2021" எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். இந்தியா முழுவதுமிலிருந்து 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தலா 10 பேர் கொண்ட 100 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் சிறிய ரக ஃபெம்டோ செயற்கைக்கோள்களின் உருவாக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக்கோள்கள் ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. 12 கிராம் முதல் 60 கிராம் வரை எடை கொண்ட இந்த 100 செயற்கைக்கோள்களை ஹீலியம் பலூன் பயன்படுத்தி விண்ணில் ஏவியது மூலம், 100 மிகச்சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஒரே நேரத்தில் செலுத்தியதற்கான கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு ரெக்கார்டு, ஏசியா புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என 5 சாதனைகள் செய்யும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
செயற்கைக்கோள்கள் ஏவப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தெலுங்கானாவின் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், டாக்டர் ஏ.சிவதாணுப்பிள்ளை, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மார்டின் குரூப்ஸ் அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், இந்நிகழ்ச்சியை நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேரில் காண்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், நாடு முழுவதிலும் இருந்து 800க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க இந்திய லாட்டரி தொழில் அதிபர் மார்டினின் தலைமையில் இயங்கும் மார்டின் குழுமம் அவர்களுக்கான உதவிகளைச் செய்துள்ளது.