கரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனாவைக் கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் போடப்படுகிறது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டுவந்த தடுப்பூசிகள், மே மாதம் 1ந் தேதியிலிருந்து 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போட அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மதுரையில் ஒரு தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அந்த பள்ளி நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “கல்வி என்பது வாழ்வியல் ஒழுங்கு. இந்த கரோனா எனும் நிகழ்வு சரித்தரத்தில் ஒரு ஆண்டையே கழித்துவிட சொல்லி வற்புறுத்துகிறது. ஒரு ஆண்டையே கழித்துவிடலாமா, அப்படி கழித்தால் அந்த ஓர் ஆண்டை எந்த கணக்கில் சேர்ப்பது என அறிவுலகம் ஆராயிச்சி செய்துவருகிறது. 172 நாடுகளில் 100 கோடி மாணவர்கள் தங்களது கல்வியை இழந்துள்ளனர். விடுப்பட்ட ஒரு ஆண்டில் எத்தனை ஆற்றல்கள் இந்த சமூகத்தைவிட்டு ஒதுங்கியிருக்கின்றன என்பது நமக்கு தெரியாது. அதை எப்படி ஈடுகட்டபோகிறோம் என்பதுதான் உலகம் முன்வைத்திருக்கும் மிகபெரும் கேள்வி. கரோனா எப்போது தீர்க்கப்படுகிறதோ அப்போதுதான் கரோனாவால் இழந்த காலத்தை நம்மால் மீட்கமுடியும்.