மேட்டூர் அருகே ரவுடியை, நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் சின்னையரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராஜேஷ் (26). வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். தற்போது கருமலைக்கூடலில் உள்ளூர் மாரியம்மன் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வியாழக்கிழமை (ஏப். 7) இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு ராஜேஷ், தனது அக்காள் மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு வந்துள்ளனர். திடீரென்று அவர்கள் ராஜேஷின் வண்டி மீது மோதினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைப் பார்த்த ராஜேஷின் அக்காள் மகளான 7 வயது சிறுமி, அங்கிருந்து பயந்து ஓடிவிட்டாள்.
சம்பவத்தின்போது ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த ராஜேஷை, அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் டி.எஸ்.பி விஜயகுமார், கருமலைக்கூடல் காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்ட ராஜேஷ் மீது கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் கொலை, அடிதடி வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அவர் மீது ஹிஸ்டரி ஷீட் எனப்படும் சரித்திர பதிவேடும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ரவுடியான ராஜேஷை, அவருக்கு எதிர் தரப்பைச் சேர்ந்த ரவுடிகள் தொழில் போட்டியினாலோ அல்லது பழிக்குப்பழியாகவோ கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கோயில் திருவிழாவில் இருந்து வீடு திரும்பும் வழியில் ராஜேஷை கொலை செய்திருக்கும் கும்பல், அவரை திருவிழா திடலில் இருந்தே நோட்டம் விட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. கொலையுண்ட நபரின் செல்போனிற்கு வந்த அழைப்புகள், சென்ற அழைப்புகள், பதிவாகியுள்ள எண்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் கருமலைக்கூடல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.