சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகள் வசதி கொண்ட உள்நோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டும் பணி கடலூர் மாவட்ட கனிம வளத்துறை நிதி திட்டத்தின் மூலம் ரூ 5 கோடியே 73 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படவுள்ளது. புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், உதவி ஆட்சியர் சுவேதாசுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் கடலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, வட்டாட்சியர் செல்வகுமார், நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ''அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுக் கட்டடம் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சிதம்பரம் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ 213 கோடி செலவில் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளுக்கான ஆரம்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகராட்சிக்கு குடிநீர் வரும் வக்காரமாரி குடிநீர் தேக்கத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. நகரில் உள்ள சுமார் 5 குளங்கள் தூர்வாரி கட்டமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை போக்க நகருக்குள் பேருந்துகள் வராமல் பேருந்து நிலையம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு செல்ல 2 கிலோ மீட்டருக்கு ரூ.40 கோடி செலவில் புறநகர் வெளிபுறச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான தில்லையம்மன் ஓடை கான்கிரீட் தடுப்பு அமைத்து அதன் ஓரம் புறநகர் சாலை அமைக்கப்படவுள்ளது'' என்றார்.