அ.தி.மு.க. ஆட்சியில் 10 வருடங்களில் புதிதாக ஒரு பகுதி நேர ரேசன் கடையைக் கூட திறக்கவில்லை என்று நரசிங்கபுரத்தில் நடைபெற்ற புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரத்தில் டி.டி.36 சித்தையன்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக புதிய பகுதிநேர கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார்.
மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் திருமாவளவன், சரக துணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நியாயவிலை கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்துவிட்டு கூறுகையில், "கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியின்போது நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தேன். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உத்தரவுப்படி கிராமங்கள் தோறும் குறிப்பாக, 300 குடும்ப அட்டைகள் இருந்தால் அப்பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தோம். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு ஆத்தூர் தொகுதியில் ஒரு நியாயவிலைக் கடையைக் கூட புதிதாக திறக்கவில்லை.
நரசிங்கபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தாங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்குகிறோம் என்று சொன்னார்கள். அந்த சிரமம் கூட அவர்களுக்கு இருக்கக் கூடாது என இன்று நரசிங்கபுரத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்துள்ளோம், கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஏழை, எளிய மக்கள் குறிப்பாக முதியோர்களுக்கு நாம் வழங்கிய நிவாரண உதவித்தொகையை கடந்த 10 வருடங்களாக அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. முதியோர்தொகை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் இருந்தால், அவர்களுக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். கூட்டுறவுத்துறை வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகளை நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் வாங்கி பயனடை ய வேண்டும்" என்று கூறினார்.