மறைந்த முன்னாள் ஜனதிபதி அப்துல் கலாமின் கனவு இந்தியா 2020ல் வல்லரசு ஆக வேண்டும் என்பது தான். ஆனால் நாட்டில் இப்போது பல்வேறு பிச்சனைகளும் அரசின் செயல்பாடுகளால் அதிருப்தி அடையும் மக்களின் போராட்டங்களும் ஒயவே இல்லை. ஆக ஒரு நல்லரசாக இருப்பதற்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்தியாவில் ஒரு புறம் மழை மறுபுறம் வறட்சி, என பன்முகமும் கலந்துள்ளது.
வாழும் மக்களில் 40 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் தான் இந்த மக்களின் முன்னேற்றத்திற்கு தான் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி அது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவழிப்பதாக மத்திய அரசு புள்ளி விபரத்தை வெளியிடுகிறது. இந்த மத்திய அரசு தனது நிர்வாகத்தை ஒரு வருடம் நடத்த அதிகமில்லை மக்களே... பத்து லட்சம் கோடி..., இதை நாம் கூறவில்லை ஈரோட்டில் நடைபெற்ற புதிய வருமானவரி கட்டிட துவக்க விழாவில் கலந்து கொண்ட கோவை மண்டல தலைமை ஆணையர் துர்கா சரண் தாஸ் தான் அரசுக்கு ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது" என்றார்.
இவர் ஐ.ஆர்.ஐ. மத்திய அரசு அதிகாரி. சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரோடு வருமான வரித்துறை அலுவலகத்தை இன்று துவங்கி வைத்த கோவை மண்டல தலைமை ஆணையர் துர்கா சரண் தாஸ் விழாவில் பேசும்போது "தற்போது உள்ள மத்திய அரசும் வருமான வரித்துறையும் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் விதி மீறுபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.வரி செலுத்துபவர்கள் மேல்முறையீடு செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது ஒவ்வொடு ஆண்டும் மத்திய அரசுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. மேலும் இது ஒவ்வொரு வருடமும் 10 முதல் 15 சதவீதம் கூடி வருகின்றது. இந்த நிதியினை முதலீட்டின் மூலமாகவோ அல்லது வேறு வழியில் ஈர்க்கப்படுகிறது" என்றார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போதுள்ள மத்திய அரசு வருமானவரித் துறையில் பல மாற்றங்கள் செய்துள்ளது, மேலும் பிற்காலத்தில் வருமானவரித்துறை யோடு ஜிஎஸ்டியும் ஒன்றாக இணைக்கப்பட கூடும், மேலும் சிஏஏ மற்றும் என்பிஆர் போன்ற பல்வேறு விதமான ரிஜிஸ்ட்ரேஷன் தேவையே இல்லை ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே போதுமானது" என்றார்.
இந்நிகழ்வில் வருமானவரி ஆணையர்கள் சந்தனா ராமச்சந்திரன்,லட்சுமி நாராயணன், ஜிஆர் ரெட்டி போன்ற உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அடேங்கப்பா... பத்து லட்சம் கோடியில் ஒரு பத்து சதவீதம் ஒதுக்கி ஏழைகளின் பொருளாதார சுமைகளை குறைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலே இந்திய நாட்டில் பசி பட்டினியுடன் இரவில் உணவு இல்லாமல் தூங்கும் 18 கோடி மக்களுக்கு உணவு கொடுக்கலாம். ஆனால் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி கூறியதை நாம் இன்றும் பாடிக்கொண்டுதான் இருக்கிறோம்.