ஹவாலா பணம் 10 லட்சம் பறிமுதல் ஹவாலா புள்ளி கைது

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிலிருக்கும் நபருக்காக ஆதாயம் பொருட்டு சட்டத்திற்குப் புறம்பான வழியில் தரப்படும் பணத்திற்கு ஹவாலா பணம் என்று பெயர். இது போன்ற ஹவாலா பணம் பரிவர்த்தனையில் மிகப் பெரிய நெட் ஒர்க்குடன் செயல்படுகிற பெரிய கேங்க்கே உண்டு. நாடு, தேசம் நகரம் என்றில்லாமல் குக்கிராமங்கள் வரை வேர் பரவியிருக்கிறார்கள் ஹவாலா பரிவர்த்தனை ஏஜெண்ட்கள். இதற்காக அவர்களுக்கு கொள்ளையாகக் கமிசனும் கிடைக்கிறது.
அறிமுகம் சரி. இனி சம்பவத்திற்கு வரலாம்
நெல்லை மாவட்டத்தின் கேரளா செல்வதற்கான நுழைவுவாயில் புளியரை. அதையடுத்து கேரளாவின் எல்லை வாசலானது கோட்டை வாசலை ஒட்டியுள்ள ஆரியங்காவு நகரம். இது கேரளாவைச் சார்ந்தது.
அன்றாடம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரள மாநில மக்களுக்குத் தேவையான அத்வாசியப் பொருட்களைக் கொண்டு செல்கின்றன. கேரளாவின் வாழ்வாதாரத்திற்கு தேவையான காய்கறி முதல் கட்டுமானப் பொருட்கள் வரை தமிழகத்திலிருந்தே செல்கின்றன. அங்கிருந்தும் தேவைப்படும் பொருட்கள் தமிழகத்திற்குள்ளும் வருகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் 24 மணி நேரமும் போக்குவரத்துப் பிசியான ஏரியா. இவைகளைளக் கண்காணிக்க இரு மாநில சோதனைச்சாவடிகளும் உள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு கேரளாவின் ஆரியங்காவு செக்போஸ்ட்டில் மது விலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் தோனிகோ தலைமையிலான போலீசார் வாகன சோதனையிலிருந்த போது தென்காசியிலிருந்து புனலூர் சென்ற அரசு பஸ்சில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது பஸ்ஸிலிருந்த ஒரு நபரிடம் நடப்புக் கரன்சியான 500,2000 கொண்ட நோட்டுக் கட்டுக்கள் வைத்திருந்தது தெரியவர, அவரை மடக்கி விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
விசாரணையில் அந்த நபர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜாபிர் அசன் என்பதும் அவரிடம் மொத்தமாக இருந்த ஹாட் கேஷ் 10 லட்சத்திற்கு முறையான ஆவணமில்லாததால் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சென்னையிலிருந்து கொண்டு செல்லும் இந்தப் பணத்தில் கேரளாவில் கார் வாங்கவிருப்பதையும் தெரிவித்த ஜாபிர் அசன், அதற்கான முகாந்திர ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை.
எனவே அவரது முரண்பட்ட பேச்சைக் கண்ட கேரள போலீஸ் இது தொடர்பாக ஜாபிர் அசனைக் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
மேலும் கேரள போலீஸ் வட்டாரத்தினரோ, தேசத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அதனை மாற்றிக் கொள்ள கால அவகாசம் கொடுத்த பிறகும் கருப்புப் பணம் வைத்திருப்போர், வெளிநாடு வாழ் இந்தியரான என்.ஆர்.ஐ.களுக்கான கால வரம்பை பயன்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான வழியில் பழைய நோட்டுக்களை கமிசன் அடிப்படையில் மாற்றி வருகின்றனர். கேரளாவில் பல புள்ளிகள் இது போன்ற வழிகளில் தங்களின் பணத்தை மாற்றி ஹவாலா முறையில் நடப்புக் கரன்சியாகப் பெற்று வருகின்றனர். அது தொடர்பாக மத்தியப் புலனாய்வு அமைப்பினர் ரகசியமாக தற்போது விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் மொத்தமாக 10 லட்சம் சிக்கியிருப்பது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. அதனடிப்படையில் ஜாபிர் அசன் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் மேற் கொள்ளப்படும் விசாரணையில் முழு விபரம் தெரிய வரும் என்கிறார்கள்.
பக்கா புளு பிரிண்ட் ஸ்கெட்ச் திட்டத்தில் செயல்படும் இது போன்ற ஹவாலா பரிவர்த்தனையை சட்டம் விடாமல் துரத்தினாலும், அதனையும் மீறி, சீமைக்கருவேல மரங்கள் போன்று செழிப்பாகவே வளர்த்து கொண்டிருக்கிறது ஹவாலா பிசினஸ்.
-பரமசிவன்
படம் : ப.இராம்குமார்