வடகிழக்கு பருவமழை கடந்த சிலநாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து வருகிறது. பல இடங்களிலும் வீடுகள் இடிந்து பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரில் பலபகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் நிரம்பி உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்தப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவி்ட்டிருந்தார்.
இந்தநிலையில்தான் மணமேல்குடி தாலுகாவில் உள்ள சின்ன இடையன் ஏரி, பெரிய இடையன் ஏரி, கொள்ளுத்திடல் ஏரி, நெம்மேலிவயல் ஏரி, இடையாத்திமங்கலம் ஏரி, பில்லங்குடி ஏரி, மகாகணபதிபுரம் ஏரி, வினைதீர்த்தகோபாலபுரம் ஏரி, பேட்டிவயல் ஏரி, சுப்பிரமணியபுரம் ஏரி ஆகிய 10 ஏரிகளும் மழைத் தண்ணீரில் நிரம்பி அருகில் உள்ள கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப்பட்டிணம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழைந்துள்ளது. பல ஏரிகள் உடைப்பு ஏற்படும் நிலையிலும் உள்ளது.
ஏரிகள் நிரம்பி ஊருக்குள் வந்ததால் அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்கள் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்ற அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது. மேலும் இடுப்பு அளவிற்கு மேல் தண்ணீர் வந்துவிட்டதால் முதியவர்கள், குழந்தைகளுடன் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் அசத்தில் இருந்தனர்.
தகவல் அறிந்து வந்த மணமேல்குடி வட்டாட்சியர் சிவக்குமார் உடனடியாக ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து மக்களை மீட்டு அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து சிகிச்சைக்கும் ஏற்பாடுகள் செய்துள்ளார். அனைவருக்கும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்து ஏரிகள் உடைப்பு ஏற்பட்டால் அதனை தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.